தண்ணீரின் அவசியமும் அவசரமும்

          நிலத்தை சல்லடைக் கண்களாக துளைத்து நிலத்தடி நீர் முழுவதையும் வெளியேற்றி விட்டோம். மண்ணில் ஈரப்பசை முற்றாக உலர்ந்து போனதால் பருவ மழைகளும் பாதை மாறிவிடுகின்றன. பங்குனி மாதம் தொடங்கியுள்ள வெயில் 41℃/43℃ என நீடிப்பதாய் உள்ளது. மழை வந்தாலும் இந்நிலை அடங்கப்போவதில்லை. 
    வான் பொய்ப்பினும் தான் பொய்க்காத காவிரி பல காலம் வறண்டே கிடந்தது. ஆற்று ஊற்று நீரும் காணாமல் போகிறது. இந்த ஆண்டு காவிரியில் தண்ணீர் வந்தது இயற்கையின் தயவே தவிர, கர்நாடகாவின் கரிசனம் நிச்சயம் இல்லவே இல்லை. 
            அடுத்த ஆண்டு காவிரியில் தண்ணீர் வருமோ வராதோ என்று எவராலும் கணிக்க முடியாது. 15 ஆண்டுகளுக்கும் மேலாக தமிழகத்தின் ஆறுகள் பலவும் கடலைத் தொடுவதே இல்லை. அவற்றின் முழு ஜீவனும் அடங்கி விட்டது.
                மலைகளிலேயே 1000/1500 அடி குழாய்கள் அமைத்து நெல், கரும்பு, வாழை என பயிரிட்டால் நிலப்புற ஆறுகளில் நீரோட்டம் உண்டாவது இல்லை. தொன்றுதொட்டு உள்ள ஆயக்கட்டு நிலங்கள் தரிசாகலாமா? எங்கே முரண்பாடு என்பதை அறிய வேண்டாமா?
                 தாகம் தணிக்க தண்ணீரைக் காணாமல் பறவைகளும் வன உயிரினங்களும் கூட தாகத்தில் மடிகின்றதை செய்திகள் வாயிலாக உணர முடிகின்றது. இடம்பெயரும் நிலை கூட உருவாகிறது. இப்படியிருக்க மனிதர்களும் கால்நடைகளும் எங்கே செல்வது என்பதே நமது கேள்வி!
                 இவற்றுக்கான விடைகாண விரைந்து முயலாத நிலையில் எவருக்கும் எதற்காக வாக்களிக்க வேண்டும்?
                கடல்நீரை குடிநீராக்கும் திட்டம் கடலோர நகரங்களுக்கு குறிப்பாக சென்னை போன்ற நகருக்கு தீர்வாகுமா? தும்பை விட்டு வாலை பிடிப்பது போலல்லவா உள்ளது?
           பயிர்வாரி முறைக்கு (Crop Pattern) இன்றளவும் சட்டம் இயற்றவில்லையே ஏன்? குடிமராமத்தும் பாசன முன்னுரிமைகளும் காணாமல் போனதற்கு காரணம் என்ன என்பது குறித்தும் பருவநிலை மாற்றங்கள் பற்றியும் விழிப்புணர்வு உள்ள தலைவர்களையும் வேட்பாளர்களையும் அடையாளம் காணுங்கள்.
        ஒரு நொடிக்கு ஒரு சொட்டு தண்ணீர் வீணாவதை தடுப்பதன் மூலம் ஒரு நாளைக்கு 21 லிட்டர் தண்ணீர் மிச்சப்படுத்தப்படும் என்கிறது ஓர் ஆய்வு. இந்த தலைமுறை தண்ணீரின் அவசியத்தை பற்றி உணராவிடில் அடுத்த தலைமுறை தண்ணீருக்காக போர் புரியும் நிலை வரும்.
            

Comments

Popular posts from this blog

நான் வியந்த சாமானியன்

வா வா பெண்ணே - உறியடி 2 ( Va Va Penne - Uriyadi 2 )