நான் வியந்த சாமானியன்
நான் இன்று விவசாயத்தை மனதளவில் நேசிக்க காரணம் அவர்தாம். கிழவனான பின்பு கிராமத்தில் தனிமையான ஒரு வயல் நடுவே உச்சிவெயில் நடுவீட்டில் படும்படி திண்ணை வைத்த ஒரு வீட்டை கட்டி குடியேற வேண்டுமென்ற ஆசை துளிர்த்ததற்கும் காரணம் அவர்தாம். தொன்னூறு வயதையொற்ற சாதாரண உயரத்தில் நரைமுடி, தாடி தலையில் வெள்ளை துண்டு, வெள்ளை வேட்டி சட்டை. இவை போதும் அவரின் அறிமுகத்திற்கு. முடிந்தவரை தமிழில் மட்டும் பேசக்கூடிய மனிதர். ஆனால் அவரின் ஆங்கிலப்புலமை அதற்கு சற்றும் குறைவில்லை.
அத்தி பூத்தாற்போல அல்லாமல் அடிக்கடி அவரை காண்பதுண்டு. விவசாயி. யாரும் அவ்வளவாய் அறிந்திராத ஒரு விவசாய அமைப்பின் தலைவரும் அவரே. மாதத்திற்கு நான்கு அல்லது ஐந்து முறையேனும் பிரதமர், முதல்வர், மாவட்ட ஆட்சியர் இப்படி யாரேனும் அவரிடமிருந்து கடிதம் பெறும் பாக்கியம் பெறுவர். ஆனால் அவர்கள் அதை படித்தார்களா என்று கேட்டால் கேள்விக்குறி தான் பதிலாக கிடைக்கும். இதுவரை ஒரு பதிலும் வந்தது இல்லை. ஆனால் அனுப்பிய இருபது பத்திரிக்கைகளில் ஏதேனும் ஒன்றில் ஒரு சிறு துணுக்காகவோ கட்டுரையாகவோ இடம்பெறும்.
இந்த வயதில் மின்னஞ்சல் செய்யும் ஒரு கிழவர். யாருடைய துணையும் இல்லாமல் ஒரு மோட்டார் சைக்கிளில் பயணிப்பார் அசாத்தியமாக. காதலித்து திருமணம் செய்தவர் என்று அவர் பேச்சில் கேட்டதுண்டு. அவர் எழுதும் அநேக கடிதத்தில் பயிர்வாரி முறை பற்றிய குறிப்பு கண்டிப்பாக இடம்பெறும். அதனுடைய முக்கியத்துவத்தை உணர்ந்தவர் போலும். கள்ளுக்கடைக்கு விதிக்கப்பட்ட தடையை நீக்கக் கோரியும் எழுதியவர். கையெழுத்து சிரமமேற்று படிக்கும்படி இருக்கும். அவரின் சிந்தனை அப்படிப்பட்டதல்ல. நிலத்தடி நீர் சேமிப்பு பற்றிய மகத்துவத்தை உணர்ந்தவர். அவருடைய கட்டுரைகளை பிரசுரம் செய்ய விரும்புகிறேன். மீண்டும் அவரை காண மிகுந்த ஆவலுடன்..
Comments
Post a Comment